வீட்டுத்தோட்ட செய்கை கலந்துரையாடல் - கிழக்கு மாகாண காப்பங்கங்கள் (யூலை 29, 2022)

இலங்கையின் கிழக்கு மாகாண சிறுவர்-முதியோர்-சிறப்புத் தேவையுள்ளோர் இல்லங்களில் வீட்டுத் தோட்டச் செய்கை தொடர்பான ஒரு மெய்நிகர் கலந்துரையாடலை அறம்செய்வோம் அறக்கட்டளை யூலை 29, 2022 அன்று ஒருங்கிணைப்புச் செய்து இருந்தது.  இலங்கையின் தற்போதைய இக்கட்டான பொருளாதார போக்குவரத்து உணவுச் சிக்கல்களை எதிர்கொள்ள வீட்டுத் தோட்டம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருப்பதால், அவற்றை முன்னெடுக்க உதவ அறம்செய்வோம் அறக்கட்டளை சிறிய நிதி உதவிகளை வழங்கி வருகிறது.  அந்தச் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.  ஏற்கனவே வீட்டுத் தோட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் இல்லங்களை சார்ந்தவர்கள், துறை வல்லுனர்கள், வீட்டுத் தோட்டத்தை முன்னெடுக்க விரும்பும் இல்லங்களைச் சார்ந்தவர்கள் என 20 பேர் வரையிலானவர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்கள். 

வீட்டுத் தோட்டத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும், பெத்தேல் சிறுவர் இல்லங்களைச் (letushelpnow.org/bethel-girls-children-home,  letushelpnow.org/bethel-boys-children-home) சார்ந்த அறங்காவலர் திரு சோமநாதன் அவர்கள் "வீட்டுத்தோட்ட சவால்களும் தீர்வுகளும்" என்ற தலைப்பில் ஒரு உரை வழங்கினார்.  திருகோணமலையில் development officer ஆகப் பணி புரியும் திரு.  தீபராஜ் அவர்கள் வீட்டுத் தோட்டம் செய்கை தொடர்பான வழிகாட்டல்களை வழங்கினார்.  மேலும், அவர் விவசாயத் திணைக்களத்தின் உதவிகளை எப்படிப் பெறுவது, அதற்கு அவர் எவ்வாறு உதவ முடியும் என்றும் விளக்கினார்.  குறிப்பாக வீட்டுத் தோட்டம் தொடர்பாக தாம் உருவாக்கி இருக்கும் காணொளி மற்றும் எழுத்து வழிகாட்டிகளை பகிரவும், தரமான விதைகளைப் பெற்றுத் தரவு உதவவும் அவர் முன்வந்தார்.  பங்குபற்றியவர்களின் கேள்வி பதில் கலந்துரையாடல்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட எண்ணங்களை கீழே சுருக்கமாகத் தொகுக்கப்படுகின்றன.

வீட்டுத் தோட்டத்தின் நோக்கங்கள்

இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையில் வீட்டுத் தோட்டத்தை இல்லங்களில் மேற்கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளார்கள்.  இல்லத்தின் தேவைகளை நிறைவு செய்தல், வருமானம் ஈட்டும் பயிர்களை வைத்தல், அல்லது இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்ற வீட்டுத் தோட்டங்கள் உதவ முடியும் என்று கூறப்பட்டது.

இல்லத்தில் வசிப்பவர்களின் பங்கேற்பு

இல்ல நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள், வீட்டுத் தோட்டம் தொடர்பாக காட்டும் ஆர்வத்தின் ஊடாக இல்லத்தில் வசிப்பவர்களையும் வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு கொள்ள முடியும்.  திரு சோமநாதன் அவர்கள் தனது உரையில், "சொன்னால் மறந்து போவார்கள், செய்து காட்டினால் நினைவில் வைத்திருப்பார்கள், சேர்ந்து செய்தால், மகிழ்வோடு சேர்ந்து செய்வார்கள்" என்று குறிப்பிட்டார்.  வீட்டுத் தோட்டம் பயன் தர சில காலம் எடுக்கும், ஆகையால் பொறுமையாக ஊக்குவிக்க வேண்டும்.  சற்றுப் பலன் தரத் தொடங்கியவுடன், ஆர்வமும் வளரும்.

மண்ணை வளப்படுத்தல்

இடத்தைத் தேர்வு செய்த பின், மண்ணை வளப்படுத்தல் ஒரு முக்கிய செயற்பாடு ஆகும்.  மண்ணை வளப்படுத்த மாட்டெரு, கலப்பு உரம், மண் புழு போன்றவற்றின் பயன்பாடு விளக்கப்பட்டது.  குறிப்பாக தீபராஜ் அவர்கள், மண்ணை தொடர்ந்து வளப்படுத்துவதற்கான வழிகளை விபரித்தார்.

பொருத்தமான தாவரங்கள், தரமான விதைகள்

நாம் வாழும் பிரதேசங்களில், இல்லத்தின் நிலத்தின் தன்மைக்கு ஏற்ற தாவரங்களை நடுதல் அவசியம்.  குறிப்பாக தரமான விதைகளை/கன்றுகளைப் பெறுதல் அவசியம்.  இவை பற்றிய விரிவான தகவல்களை தீபராஜ் அவர்கள் பகிர்ந்தார்கள்.

நாற்றுமேடையின் முக்கியத்துவம்

தோட்டம் பயிரிட, இல்லங்கள் தாமே ஒரு நாற்றுமேடையை ( nursery)  உருவாக்கினால் பலன் தரும் என்று திரு சோமநாதன் அவர்கள் குறிப்பிட்டார்.  மேலதிக கன்றுகளை அயலவர்களுக்குப் பகிர முடியும், அல்லது விற்க முடியும்.  

எதிர்நோக்கும் சவால்கள்

கடற்கரையோர மணல் மண், உப்புத் தண்ணீர், ஈரத்தன்மை மிகுத நிலம், தொல்லை தரும் பூச்சிகள் உட்பட்ட பல தரப்பட்ட பிரச்சினைகளை பல இல்லங்கள் பகிர்ந்து கொண்டன.  இவற்றை கையாழுவதற்கான வழிமுறைகளை தீபராஜ் அவர்களும், கலந்து கொண்டவர்களும் பகிர்ந்து கொண்டனர்.  மேலதிகமாக தகவல்களைப் பெற, உதவிகளைப் பெறுவதற்கான வழிகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மேலதிக வளங்கள்

https://www.facebook.com/groups/556846558685580 

https://agricultureinformation.lk/foodcris-sl-books/

https://drive.google.com/file/d/1boToTI8de0dW9fv8k2iE7HksLnv8OT6D/view 

https://doa.gov.lk/