Akal Award 2024 - Dr. Jayadevi Ganesamoorthy
2024 அகல் விருதினை பெருமைப்படுத்துபவர் மருத்துவர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி.
மருத்துவர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி அவர்கள் தன் வாழ் நாளின் பெரும் பகுதியினை தன் மக்களின் மேம்பாட்டிற்காக மருத்துவராகவும், பல்கலைக்கழக மருத்துவ ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
1987ம் ஆண்டில் யாழில் செயற்கை அவயங்கள் தயாரித்துப் பொருத்தும் நிறுவனத்தினை இணை நிறுவனராக ஆரம்பித்தார். அதனை யாழ் ஜெயப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனமாக உயர்த்தி விரிவாக்கினார். போரினால் அவையங்களை இழந்த அனைவருக்கும் இன்றியமையாத சேவையினை இந்த நிறுவனம் வழங்கவும் தொடர்ந்து வழங்கவும் பெரும் பணியாற்றினார். இன்று அதன் காப்பாளராக இருந்தாலும் இயன்ற பொழுதெல்லாம் சென்று பயனாளிகளைப் பார்வையிட்டும் வருகிறார்.
விழாக்கள் விருதுகள் என எதனையும் விரும்பாத இந்த அன்புள்ளம் எல்லாவற்றையும் இறைபணியாகக் கருதி தன்னலமற்று பணியாற்றுபவர். அகல் விருதினையும் எம் அன்பிற்காக மாத்திரமே எளிமையாகத் தம் இல்லத்தில் பெற்றுக்கொள்ள சம்மதித்தார்.
இம்மாதம் 17ம் திகதி முழு பூரண நாளில் அம்மையாரின் இல்லத்தில் எளிமையாக நிகழ்வு நடைபெற்றது. அறம் செய்வோம் அறக்கட்டளை இலங்கைத் தலைவி மருத்துவர் தயாளினி மகேந்திரன், அறம் செய்வோம் அறக்கட்டளையின் இயக்குநர்கள் சார்பில் சுபகரன் பாலசுப்பிரமணியம், தன்னார்வலர் மகேசன் ஆகியோர் கலந்துகொண்டு விருது வழங்கிப் பெருமை கொண்டனர்.
அகல் விருது - 2024 இனது நிதிப்பரிசினை மருத்துவர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி அவர்கள் யாழ் ஜெயப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிதியான ரூபா 225,000.00 இனை இவ்வாண்டு பெருமூளை வாத குழந்தைகளின் வருடாந்த சுற்றுலாவிற்காக உபயோகிக்க வேண்டுகோள் விடுத்தார்.
இன்று தனது 84ம் அகவையினை மிக எளிமையாகக் கடந்து செல்லும் மருத்துவர் திருமதி ஜெயதேவி கணேசமூர்த்தி அம்மையாரை அறம் செய்வோம் அறக்கட்டளை கௌரவித்து கொண்டாடி மகிழ்ச்சி கொள்கின்றது.